பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஜனவரி 18, 2026

வாசிப்பில் - ஜனவரி 18


இன்றைய வாசிப்பில்,
கவிக்கோ அப்துல் ரகுமானின் 'பால்வீதி' கவிதைகள்.

-தாகம்-

வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே !
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்...

- கவிக்கோ அப்துல் ரகுமான்

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜனவரி 16, 2026

- ஒழுகிய அன்பு -


எதார்த்தமாக சிலர் பார்த்துவிடுகிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லாமலிருந்தால் அருகில் வந்து நலம் விசாரிக்கிறார்கள். அடுத்த கேள்வியாக 'என்ன வேலை செய்றிங்க..?' என்ற கேள்வி வந்து விழுகிறது.

அவர்களிடமும் வேலை கேட்டிருக்கிறேன். விபரங்களை வாங்கி கொண்டு எனக்கு பதில் சொல்வதாகச் சொன்ன அவர்கள் மறந்திருக்கலாம். நான் மறக்க முடியாதே.

நான் திரும்ப கேட்டிருக்கலாம்தான். "ஏன் தொந்தரவு செய்றீங்க. வேலை இருந்தா நாங்களே சொல்லமாட்டோமா? எங்க வேலைக்கே இவ்வளவு பிரச்சனை இருக்கு.. நீங்க வேற..." என யாரும் உங்களிடம் கேட்டிருந்தால் என் தயக்கம் உங்களுக்கும் புரியும்.

நமக்கு வேலை இல்லை என்பதுதான் பிரச்சனை. அவ்வளவுதான். ஆனால் அவர்களுக்கு செய்கிற வேலையிலேயே ஆயிரம் பிரச்சனைகள். அவர்கள் ரொம்பவும் பாவம்தான் இல்லையா?

மனதில் இவையெல்லாம் ஓடினாலும், கொஞ்சமாய்ப் புன்னகித்து எல்லாவற்றையும் மறைத்தபடி, 'வழக்கம் போலவே இப்போதும் புத்தகங்கள் விற்பதாக' சொல்கிறேன்.

"ஓ இன்னும் புக்குதான் விக்கறீங்களா..." என்றபடி ரொம்பவும் அன்பொழுக சிரித்தபடி கடந்துவிடுகிறார்கள்.

அவர்கள் சிரிப்பிலிருந்து ஒழுகிய அன்பு என் கண்ணெதிரிலேயே சாலையோற சாக்கடையில் கலக்கிறது.

நமக்கு உதவுவதாகக் கூறிய பலரிடமிருந்து ஒழுகிய அன்பு எல்லாமே அங்குதான் வந்து சேர்கிறது போல.

சாக்கடைகள் அடைத்துக்கொள்வதற்கு குப்பைகள்தான் காரணம் என நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....

- படரட்டும் ஒளி -


சாப்பாட்டுக்கடையில் வேலை செய்கிறவர்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. சிலருக்கு சரியாக சாப்பாடே கிடைப்பதுமில்லை.

ஆனால் அவர்கள் சாப்பாடுகள் சூழ இயங்கி கொண்டிருப்பார்கள். வருகிறவர்களுக்கு தட்டு நிறைய போட்டு வயிறு நிறைய சாப்பிட வைப்பார்கள்.

ஏறக்குறைய எனக்கும் அப்படித்தான் 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை' என இணைய புத்தக அங்காடியைப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தாலும், அவ்வளவு எளிதாக எனக்கு தேவைப்படும் புத்தகங்களை நானே பணம் செலித்தி வாங்கி வாசிக்க முடிவதில்லை.

எனக்கு பிடித்த ஒரு புத்தகம் வாங்கி வாசிக்க குறைந்தது ஐந்து புத்தகங்களில் இருந்து ஏழெட்டு புத்தகங்களையாவது உங்களிடம் நான் விற்க வேண்டும்.

அதிலும் புத்தகங்கள் விற்று கிடைக்கும் வருவாயில் குடும்ப செலவுகள் முதல், கடன்களைக் கட்டுதல் வரை முதற்கட்டமாக ஒதுக்கி வைக்க வேண்டும். சில சமயத்தில் கையைக் கடிக்கும் சில சமயத்தில் கழுத்தை நெறிக்கும்; ஆனாலும் எப்படியாவது உயிர் வாழ வேண்டும். ஏனெனில் இந்த உயிரை நம்பி இன்னும் சில உயிர்கள் இருக்கிறார்கள்.

சரி வேறெதும் வேலைக்கு போகலாம் என்றாலும் அதிக நேரம் நிற்கவும் முடியாமல் அதிக நேரம் உட்காரவும் முடியாமல் உடலில் சில சிக்கல்கள் வந்துவிட்டன. அடிக்கடிவரும் தலைவலியால் அவதிக்கு ஆளாகிறேன். 30 வயதுவரை சளித்தொல்லையைத் தவிர உடலில் சொல்லிக்கொள்ளும்படி வேறெந்த சிக்கலும் எனக்கில்லை. ஆக நான் நன்றாகத்தான் இருந்தேன்.

அதன் பின் ஏற்பட்ட விபத்தொன்றில் (அது விபத்துதானா என்ற கேள்வியை இயற்கையிடம் விட்டுவிட்டேன்; என்னால் வேறென்ன செய்ய முடியும்) தலையில் பட்ட அடியால் வந்த வினைதான் எல்லாம்.

ஒரு முறை தலையில் பலமாய் நீங்கள் அடி வாங்கிவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். நண்பர்களே இனி உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
எண்சாண் உடம்பிற்கு மட்டுமல்ல, நாம் எத்தனை சாண்களாக வளர்ந்திருந்தாலும் நமக்கெல்லாம் நம் சிரசுதான் பிரதானம். ஆகவே அதில் கவனம்.

புத்தகங்களை விற்பதை நான் ஆத்மார்த்தமான ஒன்றாக நினைக்கிறேன். அதனால்தான் நீங்கள் புத்தகங்களைப் பற்றி கேட்கிற போதெல்லாம் அதிகப்படியாகவே புத்தகத்தைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

புத்தகங்களை உங்கள் தலையில் கட்டுவதற்குத்தான் இப்படியெல்லாம் பேசுகிறேன் என நீங்கள் நினைப்பது கூட எனக்கு நன்றாக தெரியும்.

 ஆனால் என்ன செய்ய, இந்தப் புத்தகத்தை நீங்கள் தவறவிடக்கூடாது என்கிற வாசக மனம் அந்த நேரத்தில் உற்சாகமாகிவிடுகிறது. அதிலும் பெரும்பாலும் அவை நான் வாசித்த புத்தகமாக இருந்தால் சொல்லவே வேண்டாம்.

நான் புத்தக விற்பனையாளன் என்பதையும் மறந்து சில புத்தகங்களை இலவசமாகவே கொடுத்தும் விடுகிறேன். ஏனெனில் ஒரு புத்தகத்தை வாசிக்கின்ற வாசகனுக்குத்தான் தெரியும் இந்தப் புத்தகம் இன்னொரு வாசகனுக்கு எவ்வளவு முக்கியம் என்று.

நான் இன்னொரு வேலையில் சம்பளம் வாங்கிகொண்டு பகுதிநேரமாக புத்தகங்களை விற்கவில்லை. என் முழு நேர தொழிலே புத்தகம் விற்பதுதான். அதில்தான் உங்களிடமிருந்து நான் சம்பளமும் வாங்குகின்றேன்.

நமது 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை'யில் புத்தக விரும்பிகளுக்காக மேலும் சில
திட்டங்களைத் தயார் செய்கிறேன் அதற்கு ஒரு முன்னுரையாகவோ உங்களுக்கு நான் சொல்லும் நன்றியாகவே இந்தப் பதிவை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில் நீங்கள் யாரும் இல்லையென்றால் எனக்கு ஒரு புத்தகத்தைக் கூட வாசிக்கவோ அது குறித்து எழுதவோ பேசவோ சாத்தியம் இருக்காது.

ஒரு மனிதன் அவன் ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஒன்றைத் தடையின்றியும் தயங்காதும் அவனைச் செய்ய வைப்பது அவ்வளவு எளிதல்ல. இயற்கை அப்படியொரு வாய்ப்பை என் குடும்பத்தின் மூலமாகவுன் உங்கள் மூலமாகவும் எனக்கு கொடுத்திருப்பதாகப் பார்க்கிறேன்.

அதற்கான காரண காரியம் அந்த இயற்கைக்குத்தான் வெளிச்சம் என்றாலும் அந்த வெளிச்சம் நாம் எல்லோருக்கும் வழி காட்டட்டும்.

அந்த ஒளி எங்கெங்கும் பரவட்டும்.

உங்கள் அனைவருக்கும் எப்போதும் எங்கள் அன்பு....

ஜனவரி 11, 2026

வாசிப்பில் - ஜனவரி 11


'பிரியத்தோடு
தந்த
விஷத்திலும்
இல்லாமல்
போகவில்லை

கொஞ்சம்
பிரியம்'
- மனுஷ்ய புத்திரன்.

இன்றைய வாசிப்பில், மனுஷ்ய புத்திரனின் 'மையல்'.
கவிதைகளைத் தேர்வு செய்ததோடு தனது அழகான கையெழுத்தில் அதனை எழுதியிருக்கிறார் பரிசல் கிருஷ்ணா.

கையெழுத்துகளில் ஒவ்வொரு கவிதைகளையும் வாசிக்கும் போது, ஒரு கவிதைப் புத்தகத்தை வாசிப்பது போல அல்லாமல் டைரி குறிப்புகளை வாசிப்பது போன்ற உணர்வையும் நெருக்கத்தையும் கொடுக்கின்றது.



தொடர்ந்து வாசிக்க... வாசிக்க... யாரோ எழுதிய டைரியாய்த் தெரிந்தது எல்லாம் நமக்கு நாமே சில தருணங்களில் எழுதிய கவிதைகளாகவும், இன்னும் சில தருணங்களில் நாம் எழுதத் தவறிய கவிதைகளாகவும் இவை அமைந்துவிடுகின்றன.

உங்களுக்கு மனுஷ்ய புத்திரனைப் பிடிக்குமா? என கேட்டு இந்தப் புத்தகத்தை பரிந்துரைக்காமல்; உங்களுக்கு கவிதைகள் பிடிக்குமா என கேட்டு இந்தப் புத்தகத்தை உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். இரு கேள்விகளுக்கும் ஒரே அர்த்தம்தான் என்பது கவிதை விரும்பிகளுக்குத் தெரியும்.


ஜனவரி 08, 2026

வாசிப்பில் - ஜனவரி 8



நண்பருக்காக காந்திருந்த போது வாசித்து முடித்த புத்தகம். முன்னமே சில பக்கங்கள் வாசித்திருந்தாலும் இன்று கிடைத்த நேரத்தை; இந்தப் புத்தகத்தை வாசிக்க பயன்படுத்தி கொண்டேன்.

கவிஞர் நரனின் 'மிளகு பருத்தி மற்றும் யானைகள்' கவிதைத் தொகுப்பு. இந்த வாசிப்பு அனுபவத்தை விரிவாகவே எழுதவேண்டும். எழுதியதும் பகிர்கிறேன்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜனவரி 03, 2026

- மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் 1 -

நடுகல்.காம் மின்னிதழில் நான் எழுதும் 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடரின் 13வது புத்தகம்,
ம.நவீன் எழுதிய 'மலேசிய நாவல்கள்;தொகுதி 1' குறித்த எனது அறிமுகமும் வாசிப்பனுபவமும்.

வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்து சொல்வதோடு, அடுத்து எழுத வேண்டிய மலேசிய எழுத்தாளரையும் அவரது புத்தகத்தையும் எனக்கி பரிந்துரைக்கவும்..

மாதம் ஒரு மலேசிய புத்தகம் 13 – ‘மலேசிய நாவல்கள்’ தொகுதி 1 - Nadukal https://share.google/ylwtrpDzHLzHlBoNa

- மாதம் ஒரு மலேசிய புத்தகம் 13 -

நடுகல்.காம் மின்னிதழில் நான் எழுதும் 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடரின் 13வது புத்தகம்,
ம.நவீன் எழுதிய 'மலேசிய நாவல்கள்;தொகுதி 1' குறித்த எனது அறிமுகமும் வாசிப்பனுபவமும்.

வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்து சொல்வதோடு, அடுத்து எழுத வேண்டிய மலேசிய எழுத்தாளரையும் அவரது புத்தகத்தையும் எனக்கி பரிந்துரைக்கவும்..

மாதம் ஒரு மலேசிய புத்தகம் 13 – ‘மலேசிய நாவல்கள்’ தொகுதி 1 - Nadukal https://share.google/ylwtrpDzHLzHlBoNa

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்